×

அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 147 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யாறில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

செய்யாறு, நவ. 4: செய்யாறில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 147 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மேல்மா சிப்காட் திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, விவசாயிகள் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று சப்- கலெக்டரிடம் மனு கொடுக்க முயன்றனர். அனுமதியின்றி செல்ல முயன்றதால் 147 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் போலீசார் அவர்களை விடுவித்தனர். ஆனால் அவர்கள் வெளியே செல்ல மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை ஏடிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டுதான் செல்வோம் என கூறினர். இதற்கிடையே செய்யாறில் மனு கொடுக்க வந்த விவசாயிகளை சப்-கலெக்டர் சந்திக்க வேண்டும் எனக்கூறி சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் பொதுமக்கள் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலை மேல்மா கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த சப்- கலெக்டர் அனாமிகா, விவசாயிகள் விவசாயிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மனுவை பெற்றார். அப்போது, விவசாயிகள் சப்-கலெக்டரிடம் கூறியதாவது: நாங்கள் 124 நாட்களாக தொடர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஜனநாயக முறையில் மனு கொடுக்க வந்த எங்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலை நீடித்தால் ரேஷன் கார்டு, வாக்காளர், அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றை ஒப்படைத்து விடுகிறோம். இதற்கும் செவி சாய்க்காவிட்டால் அடுத்தகட்டமாக நாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள். கோழிகளை ஒப்படைத்து விடுகிறோம்.

அதற்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக ஆளுநரிடம் கருணை கொலை மனு அளிக்கிறோம். அதற்கும் பதில் இல்லை என்றால் தொடர் உண்ணாவிரதம் நடத்தி எங்கள் பூமியிலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறோம் என்றனர். மனுவை பெற்ற சப்-கலெக்டர் அனாமிகா, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதையேற்று விவசாயிகள் உள்ளிருப்புபோராட்டத்தை கைவிட்டனர். மேலும் மேல்மா கூட்ரோட்டில் நடந்த மறியலும் கைவிடப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்று கைதான 96 பெண்கள் உள்பட விவசாயிகள் 147 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 147 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யாறில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து appeared first on Dinakaran.

Tags : Chipkat ,Seyyar ,Chipcott ,Dinakaran ,
× RELATED துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது...